கட்டுரை

தலைமையின் நிழல்

அசோகன்

மகாத்மா காந்தி தன்னுடைய வாராந்திர மௌனவிரதத்தை இரண்டே முறைதான் உடைத்திருக்கிறார். தன்னுடைய உறவினரும் சகபோராட்டக்காரருமான மதன்லால் காந்தியின் மறைவின் போது ஒருமுறை. இரண்டாவது தடவை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆசிரமம் வந்த ஒருவரைக் கண்டு ஆதுரத்துடன், எப்படி இருக்கிறாய் மஹாதேவ்? என்று கேட்டார். ஆம். காந்தியின் உதவியாளர் மகாதேவ் தேசாய்!

காந்தியின் அரசியல் சகாக்களை நாம் அறிவோம். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு காந்தி என்ற மனிதருடன் உடன் இருந்து அவருக்காக உழைத்த நிறையபேரில் மகாதேவ் தேசாய் முதன்மையானவர். இலக்கியம் பயின்றவரான மகாதேவ், படிப்பை முடித்துவிட்டு தன் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்க் அருமையான வேலைவாய்ப்புகள் இருந்தும் காந்தியுடன் இருப்பதாக தன் வாழ்வைத் தேர்வு செய்தார். காந்தியின் செயலாளர் என்ற முறையில் பெரும் உழைப்பைத் தந்த இவர், காந்தியைப் பார்க்கவரும் தேவையில்லாத ஆட்களை அனுமதிக்காததன் மூலம் அவருடைய நேரத்தில் பத்து ஆண்டுகளை சேமித்துத் தந்தவர் என்று சொல்லப்படுவதுண்டு.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அடுத்து காந்தி கைது செய்யப்பட்டு பூனாவில் சிறையில் அடைக்கப்பட்டபோது உடன் இருந்த மகாதேவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். காந்தியின் அரசியல் வாழ்வின் பெரும் பணிகள் மகாதேவின் தன்னலமற்ற சேவையால்தான் சாத்தியம் ஆயின. புத்தருக்கு ஒரு ஆனந்தரைப்போல் காந்திக்கு மகாதேவ் என்பார்கள்.

எல்லா தலைவர்களுக்கும் தங்களை உடனிருந்து உதவிசெய்ய, ஆலோசனை சொல்ல, மனம் விட்டுப்பேச ஒரு நம்பகமான ஆள் தேவை. அதே சமயம் அந்த நபர் ஒருபோதும் தலைவனின் இடத்துக்கு ஆசைப்பட்டுவிடாதவராக இருக்கவேண்டும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் மனிதர்கள் கொண்ட இவ்வுலகில் அப்படி ஒரு ஆள் கிடைப்பது அரிது. வரலாற்றில் வெற்றிபெற்ற பலரின் கூடவே இப்படி அறியப்படாத ஆத்மாக்களும் இருந்திருக்கிறார்கள். நம் எல்லோருக்கும் தெரிந்த, அனைவராலும் அறியப்பட்ட உதாரணம் சந்திரகுப்தருடன் இருந்த சாணக்கியர். அவர் சந்திரகுப்தர் அரியணை ஏறவேண்டும் என்று ஆசைப்பட்டாரே தவிர தான் அரியணை ஏறவேண்டும் என்று கருதவே இல்லை. தமிழகத்திலும் அரசியல் தலைவர்களுடன் இருந்த, இருக்கும் சிலரைப் பற்றி இங்கே எழுதியிருக்கிறோம். நம் ஊர் அரசியலில் சகல வெற்றிவாய்ப்புகளையும் பெற்றிருந்த ஒரு தலைவரும் இருந்தார். ஆனால் அவருக்கு வெற்றி தேவதை மாலையிடுவது தவறிக்கொண்டே போனது. இப்போது சிந்திக்கையில் அவருக்கு தன்னலம் கருதாத ஓர் உதவியாளரையாவது உடன் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றாததோ அமையாததோ காரணமாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இரண்டு குறள்களைச் சொல்லாவிட்டால் இந்த பகுதி நிறைவடையாது.

1)         அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (மன்னரைச் சேர்ந்தொழுகல்)

2)         பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும் (அமைச்சு)

(யாரங்கே... எழுபது கோடியாமே? என்னான்னு விசாரி... என்கிறவராக நாம் இருந்தால் வள்ளுவப் பெருந்தகைதான் என்ன செய்வார்?!)

டிசம்பர், 2015.